நெல்லை: அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவில் பாறை சரிவு ஏற்பட்டு, அதில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். ஏற்கெனவே 4 நபர்கள் மீட்கப்பட்ட நிலையில் 5ஆவது நபரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவிற்குள் மீட்கப்பட வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவித்த நிலையில் தொடர் மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் என கூட்டாக பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து மண் மற்றும் கற்கள் சரிவு ஏற்பட்டதால் 5ஆவது நபர் உடல் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு பணியை நிறுத்திவிட்டனர். எனவே, மீட்புப் பணியில் 4ஆவது நாளாக ஈடுபட முயன்றபோது, காலை முதல் சாரல் மழை பெய்வதால் குவாரியில் பாறைகள் முழுவதும் மழைநீரில் நனைந்து காணப்படுவதால் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மீட்புப் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் மீட்புப் பணி தொடங்குவது குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் . 6ஆவது நபரைக் கண்டுபிடிக்க மோப்ப நாய் ரெக்ஸூம் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. மழையின் காரணமாக அந்த பணியிலும் தொய்வு ஏற்பட்டது.
பிறகு மழை குறைந்ததைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மீட்புப் பணி தொடங்கப்பட்டது. இன்று 5ஆவது நபரின் உடல் மீட்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில் 6ஆவது நபரின் உடல் கிடக்கும் பகுதியைக் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: நெல்லை குவாரி விபத்துக்குக் காரணம் என்ன? - அடுத்தடுத்து அம்பலமான விதிமீறல்கள்!