திருநெல்வேலி: நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்; புதிய கல்விக் கொள்கையைக் கைவிடவேண்டும்; மாநில சுயாட்சி மீட்க வேண்டும் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி 21 நாள் பரப்புரை பயணத்தைத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக நெல்லை சிந்துபூந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி பேசினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'மத்திய அரசு மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வியைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய நாட்டில் கல்வி ஓடையில் இருக்கும் முதலைகளிடம் இருந்து பிள்ளைகளைத் தடுக்க வேண்டும் என்றே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் நிறைவு பெறுகிறது.
மனு தர்மம் மீண்டும் புகுத்தப்பட்டுள்ளது. குலக்கல்வித் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில அரசுக்கான கல்வி உரிமை கிடையாது எனச்சொல்லி அனைத்து உரிமையும் மத்திய அரசுக்குத்தான் எனச்சொல்வது அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதி எடுத்ததற்கே விரோதம். அரசியலமைப்புச்சட்டத்தை மீறித்தேர்வு நடந்து வருகிறது' எனத் தெரிவித்தார்.
சட்டவிரோதமாகச் செயல்படும் ஆளுநர்:அதிகாரத்தை மீறி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நீட் மசோதாவை ஆளுநர் நிராகரித்துள்ளார். மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி சட்டப்பேரவையில் நீட் மசோதாவிற்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ள நிலையில் ஒன்றரை மாதமாக அதனைக் கிடப்பில் போட்டு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டுவருகிறார்.
திட்டமிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை, அதன் வழிப்படி செயல்பட முடியாமல் ஆளுநர் தடை செய்கிறார். நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சட்டப்பேரவையில் அரசின் கொள்கைப்படி படித்துவிட்டு, நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது எனச் சொல்கிறார். இந்தியாவே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியைப் பாராட்டுகிறது.
தமிழ்நாடு கல்வி, மருத்துவம், வறுமை ஒழிப்பு, பெண் கல்வி போன்றவைகளில் கஜானா காலியாக இருக்கும் போதும் கூட முதலிடத்தில் இருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக கடன் பெற்று நெருக்கடியில் ஆட்சி நடக்கும் நிலையில் அரசின் கொள்கையை மீறி, நீட் தேர்வு மசோதாவை மேலிடத்திற்கு ஆளுநர் அனுப்ப மறுக்கிறார். மாநிலம் வளரவேண்டும் என அனைவரும் எண்ணும்போது மாநிலம் வளர்ச்சி அடையக்கூடாது, திராவிட மாடல் கூடாது என ஆளுநர் சொல்கிறார்.
போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்:வேண்டும் என்றே தகராறு உண்டாக்க வேண்டும் என்று போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடப்பதற்கு எதிராக, வடக்கே இருந்து அனுப்பப்பட்ட ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டப்படி கடமையைச் செய்யாமல் தேவையில்லாமல் அதிகமாகப் பேசி மாநிலத்தின் வளர்ச்சி தேவை இல்லை என்கிறார்.
ஆளுநரைத் திருப்பி அனுப்ப வேண்டும்: சமத்துவம், சாதி ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு, எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். இதுதான் மனுதர்ம ஒழிப்பு. நீட் தேர்வு என்பது புதைக்கப்பட்ட கன்னிவெடி போன்ற ஆபத்தானது. தேவைப்பட்டால் ஆளுநரைத் திரும்பி அனுப்ப வேண்டும் என்பதை முடிவு செய்யக்கூடிய அளவிற்கு மக்களை ஆயத்தப்படுத்தவே இந்த சுற்றுப்பயணம்.
நுழைவுத்தேர்வு வைத்து ஏழைப்பிள்ளைகளின் கல்வியைத் தடுக்கக்கூடாது. தடுப்பு முயற்சி மற்றும் தடைகளை உடைக்கவே போராட்டங்கள் நடக்கிறது. ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்பதை திராவிடர் கழகம் எச்சரிக்கிறது' என தெரிவித்தார்.
இதையும் படிங்க;தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைப்பு