திருநெல்வேலி: பாபு என்பவர் தனது நண்பர்களான கிரி சவுந்தர் உள்ளிட்ட 4 நண்பர்களுடன் பெங்களூரில் லைம்லஸ் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கழுதைப்பால் மூலம் சோப்பு முக சாயம் க்ரீம்கள் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தி செய்து உலக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக பாபு மற்றும் அவரது நண்பர்கள் பெங்களூரில் பல்வேறு இடங்களில் கழுதை வளர்ப்பவர்களிடமிருந்து கழுதைப்பால் பெற்று வந்தனர். ஆனால் கழுதை இனங்கள் அழிந்து வருவதால் பால் உற்பத்தி குறைந்துள்ளதை தெரிந்து கொண்டனர். ஆதலால் அவர்கள் தேவைக்கு ஏற்ப கழுதைப்பால் கிடைக்கவில்லை. எனவே பாபு மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அழிந்து வரும் கழுதை இனத்தை பாதுகாக்க மற்றும் தங்கள் வியாபார தேவைக்காகவும் தமிழகத்தில் கழுதை பண்ணை அமைக்க திட்டமிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் ’தி டாங்கி பேலஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்ட கழுதை பண்ணை அமைத்துள்ளனர். இங்கு மகாராஷ்டிராவின் கத்தியவாடி கழுதைகளும் குஜராத்தின் ஹில்லாரி இன கழுதைகளும் தமிழ்நாட்டின் நாட்டின கழுதைகளும் வளர்க்கப்படுகின்றன.
மிக வேகமாக அழிந்து வரும் கழுதைகள் இந்திய அளவில் 1800 மட்டுமே இருப்பதாகவும், தமிழக அளவில் ஆயிரம் கழுதைகள் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாட்டு சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தனது ஆராய்ச்சியில் கழுதைப்பால் தாய்ப்பாலுக்கு இணையானது என்றும், இதில் குறைந்த புரதமும் கொழுப்பும் இருக்கிறது என்றும் மதிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற நிலையில் தற்போது கழுதை பால் ஒரு லிட்டர் ரூபாய் 7000 விற்கப்படுவதாக பாபு மற்றும் அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது உலக அளவில் கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. எனவே கழுதை இனத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் பாபு மற்றும் நண்பர்கள் இந்த பண்ணையை அமைத்துள்ளனர்.
இங்கு நாள்தோறும் கழுதைகள் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு அவற்றிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக விருத்தாச்சலத்தில் இருந்து கழுதை வளர்ப்பில் அனுபவம் கொண்ட இரண்டு குடும்பத்தினர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினந்தோறும் கழுதைக்கு அருகம்புல், கொண்டைகடலை, சோளம் போன்ற உணவுகள் வழங்குகின்றனர். நாள்தோறும் சராசரியாக 15 லிட்டர் என மாதம் சுமார் 450 லிட்டர் கழுதைப்பால் இங்கு உற்பத்தி செய்யபடுகிறது.
இதன்மூலம் பாபு மற்றும் அவரது நண்பர்கள் மாதம் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் பால் பெரும்பாலும் அவர்களின் சொந்த நிறுவனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதுபோக இப்பகுதி பொதுமக்களுக்கு 50 மில்லி 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கழுதை பண்ணையை இயற்கை முறையில் பராமரித்து வருகின்றனர். பதப்படுத்தப்பட்ட கழுதைப்பால் 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பண்ணை நிர்வாகி கிரி சவுந்தர் நம்மிடம் கூறுகையில், "அழிந்துவரும் கழுதைகளை பாதுகாக்க இந்த கழுதை பண்ணை அமைத்துள்ளோம். மேலும் ஐரோப்பிய நாடுகளில் கழுதை தெரபி சிகிச்சை செய்து வருகின்றனர் எனவே தமிழகத்தில் முதல் முறையாக கழுதை தெரபி சிகிச்சை கொண்டு வரும் திட்டமிட்டுள்ளோம்.
ஒரு கழுதை 300 மில்லி முதல் அதிகபட்சம் 500 மில்லி பால் உற்பத்தி கொடுக்கும் பிற இடங்களில் மூன்று முறை பால் கறப்பார்கள். ஆனால் நாங்கள் ஒரு முறை மட்டுமே பால் கறப்போம். மீதமுள்ள பாலை குட்டிகளுக்கு கொடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தில் அசத்தும் நெல்லை பொறியாளர்