நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பொதுமக்களுக்குப் பல்வேறு வகையான அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. குறிப்பாக, ஒரு குடும்பத்தில் ஆண் வெளியே சென்று பம்பரம்போல் சுழன்று சம்பாதித்தால் தான் வீட்டில் நிம்மதி ஏற்படும். ஆனால், இந்த ஊரடங்கால் பல்வேறு ஆண்கள் வேலை இழந்து வீட்டில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கணவர் ஒரு நாளாவது தன்னுடன் நீண்ட நேரம் செலவிடுவாரா என்ற ஏக்கத்திலிருக்கும் பெண்களுக்கு, இந்த ஊரடங்கு உத்தரவு சாதகமாக அமைந்தாலும் கூட, நாட்கள் செல்ல செல்ல பந்தம் கசந்து, குடும்பத்தில் வன்முறைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஆம். கரோனா ஊரடங்கால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது டாஸ்மாக் கடைகள் தான். அதாவது வருமானம் இல்லாத சூழ்நிலையிலும் கடன் வாங்கியாவது மது அடிக்கும் ஆண்கள், வீட்டில் தங்கள் குடும்பத்தினருடன் சண்டையிடுவது, மனைவியை துன்புறுத்துவது ஆகிய சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஏற்கெனவே மதுவால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக அரங்கேறிவரும் நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவால் பெண்கள் மேலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் மீதான வன்முறையால் பல பெண்கள் தற்கொலை உள்ளிட்ட சில விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். சில குடும்பத்தில் கணவன், மனைவி பிரச்னை பெரிதாகி, கணவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சூழல் ஏற்படுகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் குடும்ப வன்முறைக்கு ஆளான பெண் ஒருவர் தனது கணவரை இழந்து தவித்து வருகிறார். வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை கன்னியாகுமரி மாவட்டம் இரணியலைச் சேர்ந்த நபருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கல்யாணத்துக்கு முன்பே அவரது கணவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். கல்யாணத்துக்குப் பிறகு தினமும் மது அருந்திவிட்டு பத்மாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுப்பழக்கத்தால் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டில் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கணவன் ஒருபுறம் துன்புறுத்திய நிலையில், மாமியாரும் பத்மாவுக்கு பல்வேறு சித்ரவதைகளை கொடுத்ததாகத் தெரிகிறது. ஏற்கெனவே சரிவர வேலைக்குச் செல்லாத பத்மாவின் கணவர், மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் முற்றிலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் தினமும் பிரச்னை செய்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் திடீரென பத்மாவின் கணவர் தற்கொலை செய்து கொள்ளவே, தற்போது பத்மா வாழ்க்கையை தொலைத்து விட்டு தனியாக தவித்து வருகிறார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பத்மா கூறுகையில், 'எனது கணவர் தினமும் மது அருந்துவார். மது அருந்தி விட்டு வந்து, என்னிடம் சண்டை போடுவார். எனது மாமியாரும் என்னை கொடுமைப்படுத்தினார். அதனால் பெரும்பாலும் நான் எங்களது அக்கா வீட்டிற்கு வந்துவிடுவேன். திடீரென ஒரு நாள் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கொடுத்தனர். தற்போது என்னை துரத்திவிட்டு, நான் அணிந்திருந்த நகையையும் பறித்துக் கொண்டனர். எனவே, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து எனது நகையை மீட்டு கொடுப்பதுடன், எனக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கிறார்.
இதேபோல் அதே வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாகப் போராடி வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் முத்துலட்சுமியின் கணவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆனது முதல் மூன்று ஆண்டுகள் தனது கணவருடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். அப்போதிருந்தே அடிக்கடி மது அருந்திவிட்டு முத்துலட்சுமியிடம் அவர் கணவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் முத்துலட்சுமியை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார். தற்போது முத்துலட்சுமி இரண்டு பெண் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வீரவநல்லூரில் வசிக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா என்ற முறையில் செலவுக்குகூட பணம் அனுப்பாமல், எந்த தொடர்பும் இல்லாமல் முத்துலட்சுமியின் கணவர், அவரை தனியே தவிக்கவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் முத்துலட்சுமி நம்மிடம் கூறுகையில், 'வீட்டில் பார்த்து வைத்துதான் எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். எனது கணவருடன் மூன்று ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தேன். அவர் அடிக்கடி மது அருந்துவார். என்னிடம் தினமும் சண்டை போடுவார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, நான் எனது தாய் வீட்டில் தான் இருக்கிறேன். ஒருநாள் கூட அவர் என்னை வந்து பார்த்தது கிடையாது. திருப்பூரில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். மதுவால் எனது வாழ்க்கையே சீரழிந்து விட்டது' என கண்ணீருடன் தெரிவிக்கிறார்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பாக உரிய சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் கூட, பெரும்பாலான காவல் நிலையங்களில் அதுமுறையாக செயல்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பேட்டியளித்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கற்பகம், 'கரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளால் பெண்கள் அதிக பிரச்னையை சந்திக்கின்றனர். ஆண்கள் சரிவர வேலைக்குச் செல்லாமல், மது அருந்திவிட்டு தினமும் வீட்டில் சண்டை போடுகிறார்கள். தமிழ்நாடு முழுதும் குடும்ப வன்முறை தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் போடப்பட்டுள்ளது. ஆனால், இதில் 80 விழுக்காடு வழக்குகள் மீது இன்னும் தீர்வு காணப்படவில்லை. குடும்ப வன்முறைக்கு எதிராக சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர் போராட்டம் நடத்தினோம். அதன்படி 498 ஏ சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த சட்டப்பிரிவை சரிவரசெயல்படுத்தாததால், தொடர்ந்து பெண்களுக்கெதிரான அநீதி நடைபெற்று வருகிறது. 498 ஏ சட்டப்பிரிவை கடுமையாக அமல்படுத்தினால் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாட்டில் குறைந்துவிடும். எனவே, குடும்ப வன்முறைக்கு எதிராக சட்டப்பிரிவை கடுமையாக்கி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
பொதுவாக கணவன்-மனைவி அதிக நேரம் செலவிட்டால் தான் இருவருக்கும் ஒருவித அன்பும் பாசமும் அதிகரிக்கும் என்பார்கள். அதேசமயம் அளவுக்கு அதிகமான நேரம் செலவிட்டால், அது மோதலில் தான் முடியும் என்கிறார், மனநல மருத்துவர் ராமானுஜம்.
இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் ராமானுஜம் நம்மிடம் கூறுகையில், 'இந்த கரோனா காலகட்டம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஒரு வித புதிய இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பெண்களுக்கு சிக்கலை கொடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆண்கள் வீட்டில் அதிக நேரம் செலவு செய்கிறார்கள். இதனால் கணவன், மனைவி இடையே பேசப்படும் கருத்துக்கள் மோதலில் முடிகிறது. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் கணவன்-மனைவி அதிக நேரம் செலவிடும்போது, விவாதங்கள் பிரச்னையில் முடிகின்றன. இதன்காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகிறது. இந்த குடும்ப வன்முறையால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த வன்முறைச் சம்பவங்களிலிருந்து மீள்வதற்குத் தீர்வு என்பது கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி வெளியே செல்ல வேண்டும். மனதிற்கு அமைதியான இசையைக் கேட்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் நிதானமாகப் புரிந்து பேச வேண்டும். அதேபோல் குடும்ப வன்முறைகள் அதிகரிக்க போதைப்பழக்கம் முக்கியக் காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது சாதாரணமாக அன்பாக பழகக் கூடிய ஒரு நபர் கூட, போதைப் பழக்கத்தில் அடிமையாகும் போது யோசிக்கும் திறன் அவருக்கு குறைந்து விடுகிறது. இதனால் வீட்டில் மனைவியுடன் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, குடும்ப வன்முறையைத் தவிர்க்க அளவான விவாதம் நடைபெற வேண்டும். இசை கேட்பது, புதிய பொழுது போக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்' எனப் பரிந்துரைக்கிறார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் காவல் துறையைத் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன் கூறுகையில், 'கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கணவன் - மனைவி இருவரும் அதிக நேரம் வீட்டில் நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
சிறிய பிரச்னையை வெளியே சொல்லாமல், அப்படியே விட்டு விடுவதால், அது பெரிய பிரச்னையாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறையைத் தடுக்க காவல் துறை சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கடந்த ஓராண்டில் கணவன்-மனைவி பிரச்னை தொடர்பாக வரப்பட்ட மனுக்களை மீண்டும் பரிசீலித்து சம்பந்தப்பட்ட நபர்கள் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏதாவது காவல் உதவி தேவைப்படுகிறதா? என்று விசாரித்து கேட்டிருக்கிறோம்.
மேலும், பெண்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக 1098 அல்லது 1091 இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதன்மூலம் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய முடியும். குடும்ப வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக கடும் சட்டப்பிரிவுகளின் கீழ், நடவடிக்கை எடுத்து வருகிறோம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால், பிணை வழங்கப்படாத அளவில் சட்டப் பிரிவுகள் கடுமையாக்கப்பட்டு, உடனடியாக தண்டனை பெற்றுத் தரப்படுகிறது' என்றார்.
இந்த கரோனா ஊரடங்கு பெண்களுக்கு பல்வேறு அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. குறிப்பாக குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதால் பெண்கள் மனம் தளராமல் முன்னெச்சரிக்கையாக தங்களுக்குத் தேவையான உரிய ஆலோசனைகளை இதுபோன்ற மருத்துவர்கள், காவல்துறை உதவியுடன் பெற்றுக் கொள்வதே வன்முறையிலிருந்து அவர்கள் மீள்வதற்கான சிறந்த வழியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதையும் படிங்க...கணவனை மகளின் உதவியுடன் கொலை செய்த மனைவி - காவல் துறை விசாரணை!