திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது திருநெல்வேலி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியினர் அமர்ந்திருக்கும் மேடையில், முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் குறித்து அவதூறாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்டன வாசகங்களூடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது, திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகள் நேற்று (ஆக.9) திருநெல்வேலி மாநகர காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலி திமுக மத்திய மாவட்டத்திற்கு உள்பட்ட 3ஆவது வார்டு திமுக இளைஞரணி சார்பில், திருநெல்வேலி மாநகர் பகுதி முழுவதும், இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணனை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக, ஏற்கனவே நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கிறது- எஸ்.பி. வேலுமணி மைத்துனர்