திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 293 பயனாளிகளுக்கு 22 லட்சத்து 3 ஆயிரத்து 280 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “வெளிநாடுகளுக்கு தமிழர்களை வேலைக்கு அனுப்ப 103 பேர் பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று பாதிப்படையும் நபர்கள் அனைவரும் போலியான நபர்கள் மூலமே வேலைக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட நான்கு பேர் மீது, இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரேன் நாட்டில் படித்து மீண்டும் தமிழ்நாட்டில் அவர்கள் பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளைத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ள பாடத்திட்டத்திற்கும் இங்குள்ள பாடத்திட்டத்திற்கு வித்யாசம் இருப்பதால் மருத்துவம் படிக்கவே தொடருவதற்கு மாணவர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை தூதரகங்கள் மூலம் செய்துகொடுப்பதற்கு அரசு தயாராக உள்ளது.
மத்திய அரசிடம் உக்ரேனில் படித்த தமிழ்நாடு மாணவர்கள் உள் நாட்டில் மருத்துவப்படிப்பைத் தொடர தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். நீட் தேர்வு இருப்பதால் அதனை செயல்படுத்தமுடியவில்லை. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது” என்றார்.
தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர, தொழிலை மாற்ற மாட்டார்கள்.
சமூக விரோதிகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்தப் பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் தங்களை நோக்கிப் பார்க்க வேண்டும். தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காலத்தில் அப்போதைய முதலமைச்சர் அவர்களைச் சென்று கூட பார்க்கவில்லை.
ஆனால், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின், அனைவரையும் நேரில் சென்று பார்த்துள்ளார். குற்றம் புரிந்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில் எவ்விதப் பாகுபாடும் பார்க்கப்படாது என முதலமைச்சர் கூறிவிட்டார்” என்றார்.
தொடர்ந்து, விஷச்சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் அமைச்சருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு, “திருமண நாள், பிறந்தநாள் போன்றவைகளுக்கு வாழ்த்துப் பெற வருகிறார்கள், பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் பணத்தில் நிவாரணமா? - ஜெயக்குமார் விமர்சனம்