திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுகிறார். இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்த அவர் புகார் மனு அளித்தார். அதில், ராதாபுரம் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு தபால் வாக்குக்கான அங்கீகாரம் வழங்குவதில் குளறுபடி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணிக்காக சுமார் இரண்டாயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. அவர்களில் பாதி நபர்களுக்கு மட்டும் தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணி ஆணையுடன் விண்ணப்பம்-12ஐ பூர்த்தி செய்து, இணைத்துக் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு மட்டும்தான் தபால் வாக்குக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது.
பணி ஆணை பெறாமல் இருக்கும் பாதி பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இதுதொடர்பாக, புகார் மனு கொடுத்துள்ளேன். தேர்தல் பணிக்குச் செல்லும் அனைவருக்கும் படிவம்-12ஐ பூர்த்தி செய்து கொடுத்து தபால் வாக்கு தகுதி வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் கட்சியின் தலைமை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை இன்று வரை நீடித்து வருகிறது. அதுதொடர்பான வழக்கும் நீதிமன்ற நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் மீண்டும் ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குக்கான அங்கீகாரம் வழங்குவதில் குளறுபடி நடப்பதாக திமுக வேட்பாளர் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.