நெல்லை: செட்டிகுளம் பண்ணையூரில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதல் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் மத்தியில் 8 ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமைச்சரவை சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்றும் ஒரு அமைச்சர் ஊழல் செய்தார் என்றும் சொல்லமுடியாத அளவிற்கு பிரதமர் மோடி நேர்மையை அளவு கோளாக வைத்து செயல்படுகிறார் என்றும் தெரிவித்தார்.
கண்ணுக்கு தெரியாத கரண்டில் ஊழல்: தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாத அளவில் ஊழல் செய்வதில் திமுகவினர்கள் வல்லவர்கள் என்றும் தற்போது கண்ணுக்கு தெரியாத கரண்டில் (மின்சாரம்) ஊழல் செய்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று முதல்வருக்கே தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர் முறையில்லாத குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க சட்ட வல்லுனர்கள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, மாநில துணை செயலாளர் சசிகலா புஷ்பா, சட்டப்பேரவை உறுப்பினரும், மூத்த பாஜக பிரமுகருமான நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக, பாஜக இடையே எந்த வித குழப்பமும் இல்லை - அண்ணாமலை அதிரடி