திருநெல்வேலி: இந்த ஆண்டு உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
உலக மனநல தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (அக்.10) மன நோய் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தனியார் தொண்டு நிறுவனத்தினர் நடத்தினர். இதையொட்டி சாலைகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை உடுத்தி சீர்படுத்தி, மனநலக் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த வகையில் வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர் சாலையில், அடர்ந்த ஜடாமுடி, தாடியுடன் சுற்றித் திரிந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை தொண்டு நிறுவனத்தினர் அழைத்து வந்து, அவருக்கு மொட்டையடித்து, அவரைக் குளிக்க வைத்து, புத்தாடை உடுத்தி, சீர்ப்படுத்தினர். பின்னர் அவரைத் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்று மனநலக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, இது குறித்து பேசிய தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சரவணன், “ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி மனநல தினத்தை முன்னிட்டு எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இது போன்று மனநோயாளிகளை மீட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தற்போது மனநோயாளிகளை மீட்டு அவர்களை சீர்ப்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்து வைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவறி விழுந்த செல்போனை எடுக்க 60 அடி தண்ணீரை வெளியேற்றிய விவசாயி!