நெல்லை: அம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (48), இவர் அகஸ்தியர்பட்டியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள், இவர்களுக்கு ஸ்ருதி(15), பிரபா சாண்டர்(12) என இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகள் ஸ்ருதி வீ.கே.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயதிலேயே விஞ்ஞானம் மற்றும் அறிவியலில் அதிக ஆர்வம் கொண்ட ஸ்ருதி தான் பள்ளியில் படிக்கும்போது விஞ்ஞானம் மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களில் அதிக கவனம் செலுத்துவார். அதன் விளைவாக சிறுமி ஸ்ருதி, மூன் வாட்டர், ராக்கெட் கேஸ், சவுத் எர்த் என சுமார் 10க்கும் மேற்பட்ட பார்முலாவை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இவற்றை தனது பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் நாசா விஞ்ஞானிகளிடம் காண்பித்து பாராட்டுகளை பெற்றுள்ளதாகவும் அந்த சிறுமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இளம் பெண் விஞ்ஞானி ஸ்ருதி கூறுகையில், எனக்கு சிறு வயதில் இருந்தே விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது, உலகிலேயே விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பாக சிறந்த கல்வி நிறுவனமாக இ.எப். அகாடமி இருப்பது எனக்கு இணையதளம் மூலம் தெரியவந்தது. இந்த நிறுவனத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும் என்பதால் இங்குதான் படிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக 'சட் (SAT)' தேர்வு மற்றும் சில நேர்காணல்களிலும் கலந்து கொண்டேன்.
அதில் வெற்றி பெற்றதன் விளைவாக, வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உள்ள இ.எப். அகாடமியில் நான் 11ஆம் வகுப்பு இயற்பியல் பிரிவில் படிக்க அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் அதற்கான ஒரு ஆண்டு கல்வி கட்டணத்தை (ரூ. 70 லட்சம்) செலுத்த எங்களிடம் போதிய நிதி இல்லாததால் மத்திய, மாநில அரசுகள் எனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை கூறுகையில், நான் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனது மகள் சிறு வயதில் இருந்தே விஞ்ஞானத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். எனது வருமானத்தை முழுவதும் எனது குழந்தைகள் படிப்பபிற்காகவே செலவு செய்து வருகிறேன்.
தற்போது நியூயார்க்கில் படிக்க அவளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு எங்களிடமும் நேர்காணல் நடைபெற்றது. இங்கு படிக்க ஆண்டுக்கு சுமார் ரூ.70 லட்சம் வரை தேவைப்படுகிறது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் எனது மகள் படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும். எனது மகள் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பாள்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசும் மாணவி ஸ்ருதி வீட்டில் கணினி வசதி இல்லாததால் செல்போன் மூலமாகவே தனது அனைத்து விதமான தேடல்களையும் பூர்த்தி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: குவாரி விபத்து - தலைமறைவாக இருந்த உரிமையாளர்கள் கைது!