நெல்லை: மனிதர்களை பூமியின் தாழ் வட்டப் பாதைக்கு, அனுப்பி அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தின் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை (Cryogenic Engine of Gaganyaan Project) நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி விண்வெளிஆராய்ச்சி மையத்தில் (Mahendragiri Space Research Centre) உள்ள உந்தும வளாகத்தில் நடைபெற்றது. 603 விநாடிகள் நடைபெற்ற இந்த சோதனையில் கிரையோஜெனிக் இன்ஜினின் பல்வேறு காரணிகள் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) செயல்பட்டு வருகிறது. இங்கு ராக்கெட் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜினின் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்படும். தற்போது இந்தியாவில் முதல்முறையாக மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செமிகிரையோஜெனிக் இன்ஜின் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை சோதனை 2000 கே.என். இடைநிலை கட்டமைப்பில் முதல் ஒருங்கிணைந்த சோதனையை இஸ்ரோ தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய தொழில்துறை பங்கேற்புடன் 2 ஆயிரம் கே.என். உந்துதல் கொண்ட செமிகிரையோஜெனிக் இயந்திரம், எதிர்கால ஏவுகணை வாகனங்கள் மற்றும் திரவ ஆக்சிஜன், மண்ணெண்ணெய் உந்துவிசை கலவையில் வேலைகளை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட சோதனையானது சுமார் 15 மணிநேரம் நீடித்து வெற்றிபெற்றது.
இந்த சோதனை இஸ்ரோவின் முக்கிய மைல்கல்காகும். இதற்கு முன்னர், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இந்த மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான சோதனையாக நடந்த 'கிரையோஜெனிக் இயந்திர சோதனை' வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்விட்டருக்கு புதிய சிஇஓ நியமனம் - எலான் மஸ்க் அதிரடி!