தென்காசி மாவட்டத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, குற்றாலம் அருவி. தமிழ்நாட்டின் முக்கிய பொழுதுபோக்குத் தலமாக அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை காலங்களில் பெய்யும் தொடர் மழையால் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும், தண்ணீரில் குளிக்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவது வழக்கம்.
கடந்த இரண்டு தினங்களாக தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுப்போக்குவரத்து, சுற்றுலாத்தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றாலம் அருவிப் பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பியே கடைகள் அமைத்திருக்கும் முந்நூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தங்களது வாழ்வாதாரத்தினை முற்றிலும் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கண்ணுக்கு எட்டும் தொலைவில் இருந்தும், அருவிகளுக்குச் சென்று குளிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்த அவ்வூர் மக்கள் குற்றாலம் அருவிகளில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி, பொதுமக்கள் குளிப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஊரடங்கு தளர்த்தப்படலாம்... எங்களின் வாழ்வாதாரம்?' - கவலையில் நாதஸ்வர கலைஞர்கள்