திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை சாலையில் பிரபல தனியார் ஜவுளிக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு இன்று கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து கடையையும் மூடியுள்ளனர்.
மேலும் ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கடைக்கு வந்த பொதுமக்களுக்கும் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லையின் முக்கிய அடையாளமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கரோனோவால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார் இந்நிலையில், தற்போது பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு தொற்று ஏற்பட்டு கடை மூடப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.