நெல்லை கரோனா வைரஸ் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்ததோடு, அரசு அதிகாரிகளுக்கு முகக்கவசங்களையும் வழங்கி, பாளையங்கோட்டைப் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளரிடம் ஷில்பா கூறியதாவது, 'நெல்லை மாவட்டத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக பத்தமடை, மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, இன்றும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு தேவையானப் பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு தனிக்குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நெல்லையில் அரசு அதிகாரிகள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில், நேரடியாகச் சென்று, அங்கு பொது மக்களுக்கு முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பது குறித்து எடுத்துக்கூறி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது வெளிமாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வேலைக்கு வந்திருந்தவர்கள் இங்கே வேலை செய்ய விரும்பினால் வேலை செய்யலாம், ஆனால் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வாகன வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தனியாக செல்ல விரும்புவோர் அவர்களது சொந்த வாகனத்தில் செல்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் சார்பில் தருகிறோம். சென்னை கோயம்பேட்டில் இருந்து யார் யார் வருகிறார்கள் என்பது குறித்தும், அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்' என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நெல்லைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. புதியதாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளைத் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது' என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் நெல்லையில் முதல் உயிரிழப்பு