தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் பரவி வரும் சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரங்களில் சராசரியாக 30 முதல் 60 பேர் வரை மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு தினங்களாக சராசரியாக 100க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்.13) மீண்டும் கரோனா அதிகரித்து, புதிய உச்சமாக மாவட்டம் முழுதும் 217 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 102 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் புறநகர் பகுதிகளான அம்பாசமுத்திரத்தில் 16 பேர், மானூர் பகுதியில் 19 பேர், நாங்குநேரியில் 9 பேர், பாளையங்கோட்டையில் 25 பேர், பாப்பாக்குடியில் 7 பேர், ராதாபுரத்தில் 9 பேர், வள்ளியூர் 20 பேர், சேரன்மகாதேவியில் 7 பேர், களக்காட்டில் ஐந்து பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 217 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2,700 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் அபூர்வா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்த கூட்டப்புளி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை கடந்த இரு வாரங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு கரோனா தொற்று தொடர்ந்து தீவிரமடைந்து வருவது நெல்லை மாவட்ட மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’10 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம்