திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆரம்பத்தில் 62 பேர் சிகிச்சை பெற்று வந்ததில் 50க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். 5 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். நோய் தொற்று குறைந்ததைத் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக இருந்த நெல்லை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 11 நாள்கள் தொற்று இல்லாத நிலையில் கடந்த மூன்று நாள்களாக நெல்லையில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாள்களில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 83 வயது முதியவர் நுரையீரல் பிரச்னை தொடர்பாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு, கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . கரோனா தொற்று பாதிப்பில் நெல்லையில் இது முதல் உயிரிழப்பாகும்.
மேலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் பகுதியைச் சேர்ந்த சென்னையிலிருந்து வந்த 25 வயது நபருக்கும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையெ நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள சேரைக்குளத்தைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவரும் சென்னையிலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனாவைத் தடுப்பதில் அலட்சியம், மது விற்பதில் அவசரம் - முன்னாள் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு