நெல்லை: குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ஆம் ஆண்டு கரசேவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை மதக்கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
குஜராத் கலவரம் நடந்த போது பிரதமர் நரேந்திர மோடி அங்கு முதலமைச்சராக இருந்தார். இந்த நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் மோடி குறித்தும் பிபிசி செய்தி நிறுவனம் சமீபத்தில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் பல தகவல்கள் திணிக்கப்பட்டு இருப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறி ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மாணவர்களும், எதிர்க்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வகுப்பறை ஒன்றில் கடந்த 25ஆம் தேதி தடை செய்யப்பட்ட ஆவண படத்தை ஒளிபரப்பு செய்ததாகவும் அதே போல் கடந்த 30ஆம் தேதி பல்கலைக்கழக விடுதியில் ஆவண படத்தை ஒளிபரப்பியதாகவும் புகார் தெரிவித்து ஏபிவிபி மாணவர் இயக்கத்தினர் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இது தொடர்பாக துணை வேந்தர் சந்திரசேகரிடம் கேட்டதற்கு, ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை செய்யவும் சம்பவம் குறித்து விசாரணை செய்யவும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்யவும் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நபர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களிடையே காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.
இது குறித்து, தெரிந்து கொள்வதற்காக நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ’பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் திரையிடப்பட்டதாக இதுவரை எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை, அதனால் நாங்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை. புகார் வரும் பட்சத்தில் விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்
இதையும் படிங்க:பொருளாதாரத்தை பாதிக்காத பட்ஜெட் - தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர்