திருநெல்வேலி: காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வந்த நாங்குநேரி தொகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்குவதாக இன்று அறிவிப்பு வெளியானது. இது குறித்து நெல்லை மாவட்டம் களக்காட்டில் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்திய பின்பு ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சொந்த தொழிலை கூட கட்சிக்காக விட்டுவிட்டு, மக்கள் பணி மற்றும் கட்சி பணியை செய்து வருகிறேன்.
இளங்கோவன், திருநாவுக்கரசர், அழகிரி உள்ளிட்டவர்களுடன் பணி செய்துள்ளேன். இடைநீக்கம் செய்துள்ளதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்சித் தலைவர்களை குறை சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆட்டை மாட்டை அடிப்பது போல் என்னை நம்பி வந்தவர்களை அடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியிலேயே தமிநாட்டில், 35 ஆயிரம் பேர் உறுப்பினராக நாங்குநேரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த அவ மரியாதை இல்லை, இந்த பகுதி மக்களுக்கு செய்த அவ மரியாதை. நாங்குநேரி தொகுதியில் கட்சி உயிரோட்டமாகவும் வளர்ந்து கொண்டும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு லட்சம் பனை நடுவதற்கான பணிகள் களக்காட்டில் இருப்பதால் தான், விலக்கு கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு கடிதம் அனுப்பி இருந்தேன். எனது தரப்பு கருத்தை தெரிவிப்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் கேட்டு இருந்தேன். என்னை கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்கியிருப்பது, மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. கட்சி என் மீது எடுத்தது தவறான முடிவு நாங்குநேரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தவர்கள் எந்த தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "குண்டர்களால் தொண்டர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது" - ரூபி மனோகர்