அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக அரசு மத்திய பாஜகவின் கைபாவையாக செயல்படுகிறது. ராகுல் காந்தியின் தமிழ்நாடு சுற்று பயணம் பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், மொழி, கலச்சாரம் உள்ளிட்டவைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பாஜக அரசு இருக்கிறது.
தமிழ்நாடு பள்ளிகளில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஹிந்தியை கட்டாயமாக்கி மும்மொழி கொள்கையை புகுத்த நினைத்தது. எதிர்கட்சிகளின் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடபட்டது. அதிமுக ஆட்சியில் தான் பெண்களுக்கும் குழந்தைகளும் எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் சட்டம் கூறுகிறது. 2017இல் 1627 வழக்குகளும், 2018இல் 2069 வழக்குகளும், 2019இல் 2473 வழக்குகளும் பதிவாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 15.6 % மட்டுமே இதுவரை தண்டனைகள் பெற்றுகொடுக்கப் பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 119 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் சம்பவத்தில் உண்மையை கண்டறிய அமைக்கப்பட்ட அருணா ஜெகதீஸன் ஆணையத்தின் அறிக்கை 3 ஆண்டுகளாகியும் தாக்கல் செய்யப்படவில்லை. சிபிஐ விசாரணையையும் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை போல இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...’போட்டோல இருக்கறது நான்தான், ஆனா எனக்கு வீடு தரல’ - அவாஸ் யோஜனா விளம்பரத்தில் இடம்பெற்ற பெண் மறுப்பு