திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை குறைந்துவருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகிறது. அந்தவகையில் படிப்படியாகப் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
முதற்கட்டமாக அடுத்த மாதம் 11ஆம் வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுவருகிறது. மேலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 54 அரசுப்பள்ளிகள், 66 அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 120 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்றுவரும் மாணவர்களுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் நேற்று (ஜூன் 16) முதல் தொடங்கியது.
இதற்காக சென்னையிலிருந்து நேற்று ஏழாயிரத்து 142 முதல் பருவ பாடப்புத்தகங்கள் பாளையங்கோட்டை அருகே வெங்கடேஸ்வராபுத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று (ஜூன் 16) அங்கிருந்து 80 அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (ஜூன் 17) மீதமுள்ள 40 பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பாடப்புத்தகங்கள் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது இப்படி தான்: சிபிஎஸ்இ விளக்கம்