திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவருவதை அடுத்து படிப்படியாகப் பல்வேறு தளர்வுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து கலை, அறிவியல் கல்லூரிகள், பிற கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களைத் தவிர்த்து பிற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு
மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே அட்மிஷன் நடைபெற்று முடிந்ததால், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் அக்டோபர் 4 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 4) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்றுமுதல் (அக்டோபர் 4) தொடங்கின.
குறிப்பாக தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரிகளில் இன்று (அக்டோபர் 4) காலை முதல் மாணவர்கள் ஆர்வமுடன் கல்லூரிகளுக்கு வந்தனர். அதே சமயம் அரசு உத்தரவுப்படி உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கல்லூரி நுழைவு வாசல் முன்பு அனைத்து மாணவர்களும் கைகளைச் சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
இதையும் படிங்க: பத்திரப்பதிவில் போலி ஆவணத்தை ரத்துசெய்ய பதிவாளருக்கு அதிகாரம்!