திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாவதி இருவருக்கும் மகனும், மகளும் உள்ளனர். கடந்த 9ம் தேதி இரவு 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் இவரது மகனை வெட்டினர். இதை தடுக்க சென்ற சகோதரியையும் வெட்டி உள்ளனர்.
இது குறித்து, நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பள்ளியில் ஏற்பட்ட சாதி ரீதியான பிரச்சினை காரணமாக, பள்ளியில் பயின்ற சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டியது தெரிய வந்தது. மேலும், வெட்டுபட்ட மாணவர் பட்டியல் இனச் சமூகத்தை சேர்ந்தவராலும், இந்த மாணவரை மாற்று சமூக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், மாணவனின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுச் சமூக மாணவர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. எனவே இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், படுகாயம் அடைந்த மாணவர் மற்றும் சகோதரி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் முதல் சினிமா நடிகர்கள் வரை மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இச்சம்பவம் வைரலாகி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 12) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது, தொலைபேசி மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரிடம் பேசினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் தைரியமாக இருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்; எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசிய போது, “பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் படி, முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார். மேலும், மாணவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்ற ஆறுதலையும், முதலமைச்சர் தெரிவித்தார். தற்போது, மாணவனுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் கல்விக்கு தேவையான உதவிகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாயிடம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும், எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாங்குநேரி சாதி மோதல் விவகாரம்.. மாணவர்கள் சாதிய வேற்றுமை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வேதனை!..