திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இன்று (ஆகஸ்ட் 5) காலை திடீரென மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், "மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்" என்று தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலர்கள் ஊழியரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். தூய்மைப் பணியாளர்களின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் மேலப்பாளையம் மண்டல அலுவலகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.