திருநெல்வேலி: தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நதியின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் மொத்தம், பொருநை மற்றும் வைகை உள்பட ஐந்து இலக்கிய திருவிழாக்களை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதில் முதல் திருவிழாவாக நெல்லை மாவட்டத்தில் பொருநை (தாமிரபரணி ஆறு) இலக்கியத் திருவிழா இன்று (நவ 26) தொடங்கியுள்ளது.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த விழாவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஒலி ஒளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஐந்து இலக்கியத் திருவிழாக்களில் முதல் திருவிழாவாக பொருநை இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு எனது வாழ்த்துகள்” என கூறினார்.
முன்னதாக மேடையின் பின்புறம் இருந்த பிரம்மாண்ட எல்இடி திரையில் பொருநை நதியின் சிறப்பம்சம் குறித்தும், மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் வசிக்கும் ‘காணி’ பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்தும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த பொருநை இலக்கியத் திருவிழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம், நூற்றாண்டு மண்டபம், மேற்கு கோட்டைவாசல், வ.உ.சி மைதானம் மற்றும் பிபிஎல் திருமண மண்டபம் ஆகிய ஐந்து இடங்களில் தனித்தனி அரங்குகளாக நடைபெறுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கவிதை போட்டி, கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'காங்கிரஸில் இனிமேல் தவறு நடக்காது;மறப்போம் மன்னிப்போம்' - ரூபி மனோகரன்