தனது 80ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு ஆன்மீக தளங்களை வழிபடுவதற்காக வந்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பொருளாதாரம் குறித்து குற்றச்சாட்டு சொல்வது மிக எளிது. மன்மோகன் சிங்கை யாரும் கேள்வி கேட்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தின் இந்த நிலைக்கு காங்கிரஸ் ஒரு காரணம். அருண் ஜேட்லி, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் இவர்கள் யாருக்கும் பொருளாதாரம் குறித்து தெரியாது என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பல வருடங்களாக பொருளாதாரம் குறித்து பேசிவருவதாகவும், பல பத்திரிகைகளில் எழுதி வருவதாகவும், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. நாட்டின் பொருளாதாரத்தில் ரகுராம் போன்ற முட்டாள்கள் பல தவறுகள் செய்துள்ளார்கள் என்றார். அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தில் நமது அமைப்பு மற்றும் கொள்கையினை மாற்றினால்தான் பொருளாதாரம் மேம்படும் என்றார்.
ப. சிதம்பரம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார், இதற்கு முன்னாடி எல்லாரையும் மிரட்டுவார் என்று கூறிய சு.சுவாமி, சிதம்பரம் மீது மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், கிட்டத்தட்ட 7 வழக்குகள் உள்ளன என்றும் தெரிவித்தார். ப.சிதம்பரம், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, வத்ரா உள்ளிட்ட அனைவரும் சிறை செல்வார்கள். காங்கிரஸ் அதன் கட்சி செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில்தான் நடத்துவார்கள் என்று தெரிவித்தார்
.