திருநெல்வேலி: கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று பல்பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது, சூர்யா என்பவரிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலிசார் நான்காவதாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுபாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் முதல் வழக்கும், அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது வழக்கும், வேத நாராயணன் என்ற ஆட்டோ ஒட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மே மாதத்தில் 3-ஆவது வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்ததாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகாரின் பேரில் கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சூர்யாவின் பல் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்டதாக சூர்யா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதில் பல்வீர்சிங், ஆய்வாளர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக சுபாஷ், அருண்குமார், வேத நாராயணன் என மூவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்வீர்சிங் மற்றும் சில காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சூர்யா கொடுத்த புகாரின் பேரில் பல்வீர் சிங் மீது 4 வது குற்ற வழக்கு சிபிசிஐடி பதிவு செய்துள்ளது வழக்கு விசாரணையில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரத்தில் சார் சாட்சியர் விசாரணை நடத்திய போது இந்த சூர்யா தான் முதலில் பல்வீர்சிங்குக்கு ஆதரவாக சேரன்மகாதேவிசார் ஆட்சியர் அலுவலகத்தில் பிறழ் சாட்சியம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்திரம் இல்லாமல் 100 கோடி லோன்; லிங்குடு இன் மூலம் பலே மோசடி.. அம்பலமானது எப்படி?