திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு சரஸ்வதி (25) என்ற மகளும் நல்லையா(எ)குட்டி என்ற மகனும் உள்ளனர். நல்லையா கார் ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் இன்று திடீரென வீட்டில் சரஸ்வதிக்கும் நல்லையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நல்லையா வீட்டிலிருந்த அரிவாளால் தனது தங்கை சரஸ்வதியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது சரஸ்வதியின் கழுத்து, கை, கால் உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து பெருமாள்புரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சரஸ்வதியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையில் சகோதரியைக் கொலை செய்த நல்லையா பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஆனால் சம்பவம் நடைபெற்றது பெருமாள்புரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் பாளையங்கோட்டை காவல் துறையினர் நல்லையாவை பெருமாள்புரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சரஸ்வதி அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததாகவும் இதுதொடர்பாக நல்லையாவுக்கும் சரஸ்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. தான் எச்சரித்தும் அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து சரஸ்வதி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த நல்லையா அவரைக் வெட்டிக்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.