திருநெல்வேலி: சேரன்மகாதேவியில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஜன.4) இந்த மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கழிவறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் குழாய் தொட்டியை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது தொட்டிக்குள் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்து கிடந்ததைக் கண்டு தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் கழிவுநீர் குழாய் தொட்டியை யாரும் உடைக்க முடியாத அளவிற்கு அடைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குழந்தையை தொட்டிக்குள் போடுவதற்காக கழிவறை குழாய் வழியாக திணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உயிரிழந்த குழந்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலேயே பிறந்ததா? அல்லது வெளிப்பகுதியை சேர்ந்த குழந்தையா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சேரன்மகாதேவி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடன் இருக்கிறதா? என்பது குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்களும் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமியை நாய் கடித்த விவகாரம்: உரிமையாளர் கைது