நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்,"தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதியிலும் தேர்தல் பணிகள் தொடங்கி விட்டோம். வரும் 25 ஆம் தேதி கோயம்புத்தூரில் பிரமாண்டமான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதைத் தொடர்ந்து 28 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.
இரட்டை இலக்கில் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமர்வார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்"என்றார்.
திருநெல்வேலி தொகுதியில் பாஜக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் பாஜக சார்பில் தேர்தல் அலுவலகம் தொடங்கப்படுகிறது. இதை வைத்து திருநெல்வேலி தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக கூறமுடியாது என்று தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவது உறுதியா என்ற கேள்விக்கு தற்போது கூற முடியாது என கூறினார். கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் தேர்தல் பணியில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்கு பிறகு அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்றும் முருகன் குறிப்பிட்டார்.