நெல்லை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (ஜன.28) நெல்லையில் அளித்த பேட்டியில், ”சட்டப்பேரவை, பாராளுமன்றத் தேர்தலை போன்றே உள்ளாட்சித் தேர்தலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
வகுப்புவாத சக்திகள் இந்தத் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. பாரதிய ஜனதா கட்சி குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு அதிமுக பலிகடா ஆகி விட்டது. அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி பாஜக கூட்டணி வைத்து சவாரி செய்கிறது .
திமுக கூட்டணிக்கே முழு ஆதரவு
திமுகவின் மதசார்பற்ற கூட்டணியை கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக ஆதரிக்கிறது. திமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அவர்களும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக திமுக உள்ளது. ஒன்றிய அரசின் மாநில உரிமை பறிப்புகளைக் கடுமையாக எதிர்க்கிறது. ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறித்து அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசின் கீழ் கொண்டுவர முயற்சி செய்கிறது. இது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய சீர் கேடாகும்.
சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பது சரியல்ல. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சுதந்திர போராட்ட வரலாற்றை மூடி மறைத்து, திசை திருப்பி, வரலாற்றைத் திரித்து கூறுவது மிகப் பெரிய அபாயம் ஆகும்” என்றார்.
இதையும் படிங்க:நடிகர் விஜய் சொகுசு கார் இறக்குமதி வழக்கு: நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!