தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற சிவ ஆலயங்களில் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பத்திர தீப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீப திருவிழா நடைபெறுவதும் வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு பத்திர தீப திருவிழா நேற்று முன்தினம் (பிப். 09) தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று (பிப். 10) நெல்லையப்பர் சன்னதி முன்பு சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.
இதையொட்டி, தங்க விளக்கு தீபத்திற்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, தை அமாவாசையான இன்று (பிப். 11) பத்திர தீப திருவிழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு சுவாமி கோயிலில் உள்ள சன்னதி வழி பிரகாரங்களில் பத்திர தீப விளக்கு ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் கோயிலில் உள்ள சன்னதி, ஆறுமுக நயினார் திருக்கோயில் உள்ள சன்னதி என கோயில் முழுவதும் பத்திர தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையு படிங்க: நெல்லையப்பர் கோயில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது