திருநெல்வேலி: தமிழ்நாட்டில் விடுபட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து முடிந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பரப்பரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய 13ஆவது வார்டு கவுன்சிலராக அமமுக வேட்பாளர் சந்திர சேகர் போட்டியிடுகிறார்.
இவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை விளம்பர பேனரில் வைத்து மக்களிடம் ஓட்டு கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி தேர்தல் முடியும், முன்பே தான் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குத் தலைவராகப் போவதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சந்திர சேகர் அடித்த விளம்பர பேனரில், "தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாசியுடன் கடையம் ஒன்றிய சேர்மன் 13ஆவது வார்டு வெற்றி வேட்பாளர் சந்திரசேகர் வாராரு வெளிச்சம் தரப் போறாரு. ஆதரிப்பீர் பிரஷர் குக்கர் சின்னம். இவன் நண்பர்கள் கடையம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரப் பேனருக்கு கடையம் பகுதி திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் சூடுபிடித்த தேர்தல்களம் - வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு