திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று பெரும்பாலான மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் போதிய அவகாசம் இல்லாததால் நீட் தேர்வில் விலக்கு வாங்க முடியவில்லை என்று அரசு கைவிரித்துவிட்டது.
இதையடுத்து பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வழக்கம்போல் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (செப்.12) நடைபெற்றது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 17 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 6,996 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். தேர்வு மையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டன.
பிற்பகல் 12 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக காலை 10 மணிக்கெல்லாம் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் தேர்வு மையத்துக்கு வர தொடங்கினர். வழக்கம்போல் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியவும் நகைகள் அணியவும் செல்ஃபோன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. எனவே தீவிர பரிசோதனைக்கு பிறகு உரிய தகுந்த இடைவெளியுடன் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தடையை மீறி நகைகள் மற்றும் முழு கை சட்டை அணிந்திருந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு அவற்றை பெற்றோரிடம் ஒப்படைத்து பிறகே மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 50 மில்லி சானிடைசர் மற்றும் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது.
தேர்வில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 மையங்களிலும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்டை மாவட்டமான தென்காசியில் மொத்தம் மூன்று மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவன் தற்கொலை