நெல்லை: அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பான பல சந்தேகங்களும் சலசலப்புகளும் சில நாட்களாக பேசு பொருளாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, 'அதிமுகவின் பின்னால் நாம் செல்ல வேண்டிய தேவை இல்லை. தனித்து போட்டியிடும் அளவிற்கு நாம் வளர வேண்டும்' என்று பேசினார். இவரின் இத்தகைய பேச்சினால், அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி நீடிக்க வாய்ப்புள்ளதா? என்பன குறித்த சந்தேகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன.
அதிமுக ஆர்ப்பாட்டம்: இதனிடையே, 'பாஜகவை சுமப்பதால் தான் அதிமுக மோசமாகி விட்டது; கூட்டணியில் இருந்து பாஜக விலகி செல்லலாம்' என்று நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா பேசியிருப்பது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று (டிச.14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா பங்கேற்று பேசியபோது, 'அதிமுக கூட்டணியில் இருப்பதால்தான் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாம் வாக்குகளை இழந்தோம். பாஜக நம்மை விட்டு சென்றுவிட்டால் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நமக்கு கிடைக்கும் வாக்குகள் பிரிந்து செல்லாது. மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினாலும் எங்களுக்கு நல்லதுதான். உங்களை தூக்கி சுமந்து நாங்கள் மோசமாகி போனோம்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மேலும் பேசிய அவர், 'அதிமுக என்ற இயக்கம் இல்லாமல் எந்த தேசிய கட்சியும், தமிழகத்தில் காலூன்ற முடியாது. அதிமுக தயவு இல்லாமல் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என நினைத்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலையின் பகல் கனவு பலிக்காது. எனவே, கூட்டணியில் இருந்து நீங்கள் விலகினாலும் எங்களுக்கு நல்லதுதான் என்று விமர்சனம் செய்தார். பாஜக அதிமுகவை விட்டு பிரிந்து சென்றால் அதிமுக மீண்டும் வலிமை பெறும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் நம்மவர் குரல் ஒலிக்கும்: மீண்டும் ம.நீ.ம-ல் இணைந்த அருணாச்சலம் நம்பிக்கை