திருநெல்வேலி: தமிழ் திரை உலகில் வளரும் நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அசோக் செல்வன். 'சூது கவ்வும்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அசோக் செல்வன் 'தெகிடி' , 'ஓ மை கடவுளே' , 'நித்தம் ஒரு வானம்' , 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உட்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார்.
சமீபத்தில் அவர் நடத்து வெளியான 'போர் தொழில்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து நடித்து இருந்தார். முழுக்க முழுக்க கிரைம் பின்னணி கொண்ட 'போர் தொழில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதன் மூலம் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் அறியப்படும் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். இதற்கிடையில் போர் தொழில் வெற்றி அடைந்த மகிழ்சியில் இருக்கும் அசோக் செல்வன், அந்த மகிழ்சியை இரட்டிப்பாக்கும் விதமாக திருமண பந்தத்திலும் தற்போது அடி எடுத்து வைத்து உள்ளார்.
அதாவது நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். கீர்த்தி பாண்டியன் 'அன்பிற்கினியாள்' 'தும்பா' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்றும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கு திருமணம் நடைபெறுவதாக கடந்த மாதம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து நடிகர் அருண் பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி என்ற கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக பத்திரிக்கையும் அடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திட்டமிட்டபடி இன்று (செப். 13) காலை மேற்கண்ட பண்ணை வீட்டில் வைத்து நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனின் திருமணம் அவர்களது பெற்றோர்கள் முன்நிலையில் கோலகலமாக நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு பசுமை விருந்து அளிக்கப் போவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை"; ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!