திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணர், கோமதியம்பாள் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான விழா ஆகஸ்ட் மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு திருவிழா பதினொறாம் நாளான நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவினையொட்டி கோமதியம்பாள் காலையில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு கோயிலில் இருந்து எழுந்தருளி தெற்குரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் தவக் கோலத்தில் வீற்றிருந்தார்.
பின்னர் மாலை சரியாக 6 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணர் எழுந்தருளி தெற்குரத வீதி தபசு மண்டபத்தில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அப்போது அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் .
மேலும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.