நெல்லை: நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், நெல்லை பேட்டை பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டை வளாகத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.
இரவு பணிக்காக வீட்டில் இருந்து கிளம்பி தொழிற்பேட்டை வளாகத்தின் அருகில் வந்தபோது நம்பியை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நம்பி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் தீவிமாக தேடி வருகின்றனர்.
இந்த கொலைக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரியும் நடுக்கல்லூர் பகுதியில் மக்கள் காலை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் நடுக்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள கோயில் நிகழ்ச்சி ஒன்றில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே நம்பி வெட்டி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் சமுதாய பிரச்சனையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பத்தை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி இருந்தது. சபாநாயகர் பேச்சு வார்த்தைக்கு பிறகு அப்பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: எல்லையில் ஊடுருவ முயற்சி ஒருவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது