திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைநம்பி (51). இவருக்கு ஐந்து சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு, நெல்லையில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பூர்வீக சொத்துகள் உள்ளன.
அந்த சொத்துகளை திருமலைநம்பிக்கு பங்கு வைத்து கொடுக்காமல் சகோதர, சகோதரிகள் 7 பேரும் ஒன்றுசேர்ந்து அவரை ஏமாற்றிவந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து அவர் பலமுறை காவல் நிலையம், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மனமுடைந்த திருமலைநம்பி இன்று (அக்.05) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.
இதனைக் கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், அவரை மீட்டு அவரது உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர், அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவரது சகோதர, சகோதரிகள் பூர்வீக சொத்தை தராமல் ஏமாற்றியதால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வரதட்ணை கேட்டு துன்புறுத்தியதால் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை முயற்சி!