திருநெல்வேலி: பாண்டிச்சேரியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு சவுக்கு கம்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வள்ளியூரைச் சேர்ந்த இம்மாணுவேல் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது நெல்லை கங்கைகொண்டான் சோதனைச்சாவடி அருகே வந்தபோது, திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாக சென்றுள்ளது.
அங்கு எதிரே பேரிகார்டர் இருந்ததால் அதில் மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, லாரி திடீரென சறுக்கி தலைகீழாக கவிழ்ந்தது. அப்போது லாரிக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்த மதியழகன் என்பவர், லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கங்கைகொண்டான் காவல்துறையினர், மதியழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுனர் இம்மாணுவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த மதியழகனின் மனைவி, சாத்தூரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘ஹலோ.. வண்டி என்ன விலை சொன்னீங்க?’ - வடிவேலு காமெடி பாணியில் நூதன திருட்டில் ஈடுபட்ட முதியவர்!