திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுது வழக்கம். அந்த வகையில் இன்று (பிப்.13) நடைபெற்ற முகாமில் காலை முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் மனு கொடுக்க வந்தனர். இந்நிலையில் மூன்று வயதான பெண் குழந்தை ஒன்று மழலை நடையுடன் கையில் மனு ஏந்தி வந்த சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்தது.
இது குறித்து குழந்தையிடம் விசாரித்தபோது, தனது பெயர் ஸபா ஹாதீயா என்றும்; மேலப்பாளையம் அம்பிகாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தங்கள் அங்கன்வாடியில் கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் உட்பட அடிப்படை வசதிகள் இல்லை என்றும்; அங்கன்வாடியில் ஒன்றுமே சரியில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழலை மொழியில் பேசியது.
பின்னர் தனது தந்தையுடன் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து குழந்தை மனு அளித்தது. குழந்தையின் தந்தை ரசூல் காதர் மீரானிடம் கேட்டபோது, “இந்த அங்கன்வாடியில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அந்த கட்டடம் மிகவும் பழமையானது. அங்கன்வாடியில் கழிப்பிட வசதி இல்லாததால் குழந்தைகள் நீண்ட தூரம் உள்ள தொடக்கப்பள்ளிக்குச் சென்று கழிவறை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
விளையாட்டு உபகரணங்களும் இல்லை. எனவே, அடிப்படை வசதிசைகளை செய்துதர வேண்டி எனது மகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்” என்றார். அங்கன்வாடியில் அடிப்படை வசதிகள் இல்லாததை துணிச்சலுடன் ஆட்சியரிடம் மனுவாக அளித்த குழந்தை ஸபா ஹாதீயாவின் செயல் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'வீரபாண்டிய கட்டபொம்மன்' வசனத்தை மழலை மொழியில் பேசிய குழந்தை