தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர், சாமிகுளம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர். இவருடைய மகன் காஃபில்கான் (வயது 22). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் காஃபில்கான் அதே பகுதியைச் சார்ந்த முகமது சமீர் என்பவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் கொடுத்த பணத்தினை திருப்பி கேட்டதன் காரணமாக காஃபில்கானுக்கும், முகமது சமீருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு சின்னமனூர் வண்டிபேட்டை என்ற பகுதிக்கு காஃபில் கான் வந்துள்ளார். அப்போது அங்கு முகமது சமீர் (20)தனது அக்காவின் கணவரான அலாவுதீன் (29) என்பவர் உடன் அந்த பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் காஃபிலை கானை முகமது சமீர் மற்றும் அலாவுதீன் ஆகிய இருவரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: போதையில் தகராறு செய்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்த மனைவி!
இதில், ரத்த வெள்ளத்தில் காஃபில் கான் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இருவரும் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற சின்னமனூர் காவல்துறையினர் காஃபீல் கான் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மேலும் சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகமது சமீர் மற்றும் அலாவுதீனிடம் கொலை சம்பவத்திற்குப் பணம் கொடுக்கல் வாங்கல் தான் பிரச்னையா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடன் பிரச்னை காரணமாக வாலிபர் சரமாரியாகக் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Bangalore tourist drowned in Kanyakumari: குமரியில் கடல் அலையில் சிக்கி 2 சுற்றுலாப் பயணிகள் பலி!