தேனி: தேனி அருகே உள்ள வீரபாண்டியை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் அப்பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் தன்னுடைய 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு விட்டதாக பிரவீன் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரை விசாரணை செய்த வீரபாண்டி போலீசார் பிரவீன் மீது எந்த தவறும் இல்லை என அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (செப்.6) இரவு தன் தாய் தந்தையுடன் பிரவீன் குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த குமார், திரவியம் மற்றும் செல்வம் ஆகிய 3 பேரும் பிரவீன் குமாரின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
அப்போது என்ன வேண்டும்? என கேட்டபோது, போலீசார் அழைத்து வரச் சொன்னதாக கூறி பிரவீனை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வீரபாண்டி ஆற்றின் அருகே பிரவீனை, மூவரும் கடுமையாக தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தங்களது பணத்தை யார் எடுத்தது? என்று கேட்டு மிரட்டியதாகவும், பின்னர் ஜாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிரவீன் குமார், வீரபாண்டி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து வீரபாண்டி போலீசார் முறையாக விசாரிக்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பிரவீன் குமார் மற்றும் அவரது தாயார் திலகம் இருவரும் கண்ணீர் மல்கதேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசாரே இளைஞர் மீது குற்றம் இல்லை என விடுவித்த பின்னரும், காவல் துறையின் பெயரைப் பயன்படுத்தி இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.