கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் ஜோன்ஸ். பிறப்பால் தமிழர் என்றாலும், தந்தை செல்லப்பா கேரளாவில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்துவந்ததால், குடும்பத்தினரும் கேரளாவில் குடியமர்ந்தனர். திருமணமாகாத ரீகன் ஜோன்ஸ்க்கு ராஜன், ஜெயசீலி, ஜான், லில்லி என உடன்பிறந்தோர் நான்கு பேர் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், தனது எம்.ஏ. பட்டப்படிப்பை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இலக்கியம் படித்துள்ளார். வேலையில்லா பட்டதாரியாகச் சுற்றித்திரிந்த இவர், 1981ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுக்கு 115 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கடிதத்தைப் பார்த்து வியந்த அமெரிக்க அதிபர், ஜோனிடம் என்ன வேண்டும் எனக் கேட்டதற்கு, ‘தங்களது பெயரின் பின்னால் உள்ள ரீகன் என்பதை, என் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ எனக் கேட்டுள்ளார். இதற்கு அனுமதி கிடைத்ததும் அன்று முதல் ரீகன் ஜோன்ஸ் என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
ரீகனின் உலக சாதனை
அதன்பின்னர் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த அவருக்கு யோசனை ஒன்று தோன்றியதன் விளைவாக, போப்பாண்டவர் ஜான் பாலுக்கு உலக அமைதிக்காக மிக நீளமான கடிதத்தை எழுதி உலக சாதனைபுரிந்துள்ளார். உலக சாதனைபுரிந்த அந்தக் கடிதம் 2.4 கி.மீ. நீளமும்,இரண்டரை அடி அகலமும் கொண்டது. இந்தக் கடிதத்தின் மொத்த எடை 100 கிலோ.
இதை எழுதுவதற்கு 24 காகிதச் சுருள்களை ஒன்றாகச் சேர்த்துத் தைத்து,10 கோடி ஆங்கில வார்த்தைகளை எழுதுவதற்கு 1002 வண்ண பேனாக்களைப் பயன்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு எழுத்தும் எழுதுவதற்குக் கறுப்பு, சிவப்பு, பச்சை என மூன்று வண்ணங்களால் எழுதி அனுப்பியுள்ளார்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கடிதம் ரோம் நகரிலுள்ள வாடிகன் தேவாலயத்தில் உள்ளது. மிக நீளமான இந்தக் கடிதமானது 10 மில்லியன் ஆங்கிலம் வார்த்தைகளைக் கொண்டது. அதிக விலை உயர்ந்த இந்தக் கடிதம் பத்திற்கும் மேற்பட்ட உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இறுதி கட்டம்
ஒரே கடிதத்தில் பல சாதனைகளைப்புரிந்த ரீகன் ஜோன்ஸ் 2011ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுப் படுத்த படுக்கையாகிவிட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார். உலக சாதனைபுரிந்த அவருக்குக் கேரள அரசு சார்பாக எந்த ஒரு சலுகையும் வழங்கப்படவில்லை. ரீகனின் மருத்துவச் செலவிற்காக வீடு, மனைகள் என அனைத்தையும் விற்று கடன் வாங்கியுள்ளனர் இவரது குடும்பத்தினர்.
வறுமையான சூழல்
ஜோன்ஸ் மறைந்து நான்காண்டுகள் ஆன பின்பு தற்போது அவரது தந்தை, சகோதரி லில்லி ஆகியோர் தேனி அருகே உள்ள ரத்தினம் நகர்ப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். ரீகனின் குடும்பத்தினர், அவரின் மருத்துவச் செலவிற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பரிதவித்து வாழ்ந்து வருகின்றனர்.
சகோதரி லில்லி தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்து குடும்பத்தை நடத்திவருகிறார். வறுமையில் வாழ்ந்து வந்தாலும் ரீகன் ஜோன்ஸைப் போலவே பொதுவாழ்வில் தங்களை ஈடுபடுத்தி சமூகப்பணி ஆற்றிட வேண்டும். ஆதரவற்றோர் இல்லம் அமைத்து அனைவரையும் அரவணைத்து வாழ்ந்திட வேண்டும் என்கிற தங்களின் விருப்பத்திற்கான உதவியை அரசு செய்து தர வேண்டும் என்கின்றனர் ரீகன் ஜோன்ஸின் குடும்பத்தினர். வறுமையில் வாடும் உலகப் பொது அமைதிக்கான சாதனையாளரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியோ அல்லது நிதி உதவியோ வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.
உலக சாதனைபுரிந்து உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த சாதனையாளரின் குடும்பம் வறுமையிலிருந்து மீண்டு வருவதற்குத் தமிழ்நாடு, கேரளா அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாதனையாளர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் சீரடையும்.