கூடலூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர், தனது மனைவி ஜெயப்பிரியா (37) உடன் லோயர்கேம்ப் அருகே வெட்டுக்காடு, கடமான்குளம் பகுதியில் உள்ள தோட்டப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தினசரி காலையில் சென்று மாலை வரை தோட்ட வேலைகள் செய்துவிட்டு வீடு திரும்புவது இவர்களது வழக்கம்.
இந்நிலையில், இன்று மாலை லோயர்கேம்ப், கடமான்குளம், காஞ்சிமரத்துறை உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனிடையே, தோட்டத்தில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் மழைக்கு ஒதுங்குவதற்காக வேறு இடத்துக்கு சென்றனர். ஆனால், ஜெயப்பிரியா மற்றும் சித்ரா ஆகியோர் அருகில் உள்ள வேப்பமரத்தின் கீழ் நின்றுள்ளனர்.
அப்போது, திடீரென பயங்கர சத்தத்தோடு மரத்தின் மீது மின்னல் தாக்கியது. அதில், மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மின்னல் தாக்கியது. இதில், ஜெயப்பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சித்ரா அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமுளி காவல்துறையினர் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த சித்ரா கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.