தேனி மாவட்ட ஆவின் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர்களின் பதவியேற்பு விழா, தேனி என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டத்திலிருந்து பிரிந்த தேனி மாவட்ட ஆவின் நிர்வாகிகள் பதவிக்கான தேர்தலில் ஓ.ராஜா தலைமையிலான அதிமுகவினர் 17 பேர் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட அமமுகவினரும், சுயேட்சைகளும் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால் அதிமுகவினர் 17 பேரும் ஆவின் நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விழாவில் இளையராஜா, செல்வராஜ், ஓ.ராஜா, ராஜசேகரன், சரவணன், ராஜலெட்சுமி, செல்லமுத்து, நமசிவாயம், சோலைராஜா கமலம், கார்த்திகா, முத்துலெட்சுமி, சுசிலா, விஜயலட்சுமி,அனிதா, சாமிதாஸ், வசந்தா ஆகிய 17பேர் தேனி இயக்குனர்களாக ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர்கள் கூடி தேனி மாவட்ட தலைவராக ஓ.ராஜா, துணைத் தலைவராக செல்லமுத்து ஆகியோரை தேர்வு செய்தனர்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பேசிய ஓ.ராஜா, ”ஆண்டிபட்டி அருகே அரசு கொடுத்த 25 ஏக்கர் இடத்தில் ஆறு மாதங்களுக்குள் நவீன முறையில் ஹைடெக் வசதியுடன் கூடிய ஆவின் பார்லர் அமைக்கப்படும். உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை 0.25 பைசாவிலிருந்து 0.50 பைசாவாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கலப்பு தீவன பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க விற்பனைகளுக்கு கிலோவிற்கு 3 ரூபாய் வீதம் 50கிலோ மூடைக்கு 150 ரூபாய் மானியம் இந்த மாதம் முதல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். கிஷான் கார்டு மூலம் 4% வட்டியில் கடன் வழங்கப்படும், கால்நடைகளுக்கான காப்பீட்டுத் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் இது போல தேனி மாவட்ட ஆவின் சங்கத்தை தமிழ்நாட்டிலேயே சிறந்த ஆவின் சங்கமாக ஆறு மாதங்களுக்குள் மாற்றிக் காட்டுவேன்” என்றார்.
இதையும் படிங்க : 'தமிழுக்காக ஒன்றுகூடிய 605 மாணவர்கள்' - 7 நிமிட உலக சாதனை!