தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி(29). இவருக்கு கடமலைக்குண்டு அடுத்துள்ள மேலப்பட்டியை சேர்ந்த முத்துக்காளை என்பவருடன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து ஹரீஷ்குமார்(13), கிஷோர்குமார்(12) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். கேரளாவில் சமையல் வேலை பார்த்து வந்த முத்துக்காளை 3 மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வருவது வழக்கம்.
இதனிடையே கட்டட வேலைக்கு சென்றுகொண்டிருந்த கலையரசிக்கு அவருடன் பணிபுரிந்த சேதுபதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. சேதுபதியின் மனைவி மற்றும் உறவினர்கள் மூலம் விவரம் அறிந்த முத்துக்காளை, கலையரசியை கண்டித்து மேலப்பட்டியில் இருந்து தர்மாபுரிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனது உறவிற்கு இடையூறாக இருந்த கணவரை (முத்துக்காளை) கொலை செய்ய சேதுபதியுடன் சேர்ந்து கலையரசி திட்டம் தீட்டியுள்ளார். பின்னர் அவரது ஆலோசனைப்படி கடந்த நவம்பர் 2ஆம் தேதி முத்துக்காளையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த கலையரசி காமாட்சிபுரம் பகுதியில் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார். அங்கு மறைந்திருந்த சேதுபதி மற்றும் அவரது நண்பர் கணேசன் ஆகியோர் சேர்ந்து முத்துக்காளையை இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு அருகிலிருந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், முத்துக்காளையின் சகோதரர் ஈஸ்வரனுடன் சேர்ந்துகொண்டு தனது கணவரை காணவில்லை என வீரபாண்டி காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி கலையரசி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரபாண்டி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்த சேதுபதியுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ததை கலையரசி ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து சேதுபதி, கணேசன் மற்றும் கலையரசி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவின் உத்தரவுப்படி சேதுபதி, கணேசன், சதித்திட்டம் தீட்டி கணவரை கொலை செய்து நாடகமாடிய கலையரசி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.