தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், குறவர் உள்ளிட்ட 68 சமுதாய மக்கள் தங்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த டி.என்.டி சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசாணை எண் - 1310ஐ ரத்து செய்து, மாநிலத்தில் டி.என்.சி, மத்தியில் டி.என்.டி என்றிருக்கும் இரட்டை சான்றிதழ் முறையை ரத்து செய்து டி.என்.டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
சமீபத்தில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுவரை சீர்மரபினருக்கு 7 சதவீதம் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசால் தொடர்ச்சியாக சீர்மரபினர் சமுதாய மக்கள் வஞ்சிக்கப்பட்டிருப்பதாக கூறி, கள்ளிப்பட்டி சீர்மரபு மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் எனும் முழக்கத்தை முன்னெடுத்து சீர்மரபு சமுதாய மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வாழ்வதற்கு எளிமையான நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற சென்னை!