தேனி மாவட்டம், கம்பம், குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(21). இவர் அப்பகுதியில் உள்ள மாவு மில்லில் தினசரிக் கூலி வெலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளியான மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து மது அருந்தும் போது ரூ.200 கடன் வாங்கியுள்ளார்.
இதையடுத்து நேற்று (ஜூன் 7) மாலை இருவரும் மது அருந்தும் வேளையில், தனது இருநூறு ரூபாய் கடன் தொகையைத் திரும்பத் தரும்படி மணிகண்டன் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என தினேஷ் குமார் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் மணிகண்டன் தான் வைத்திருந்த தேங்காய் உரிக்கும் அரிவாளால் தினேஷ்குமாரின் காலில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் தினேஷ் குமாரின் பின்னங்கால் நரம்புகள் துண்டிக்கப்பட்டு, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் காவல் துறையினர் தினேஷ்குமாரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே தினேஷ்குமார் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தேடுதல் வேட்டையை துரிதப்படுத்திய கம்பம் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருநூறு ரூபாய் கடன் தராததால் கூலித் தொழிலாளியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.