சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மூத்த மருத்துவர் பாலாஜி கத்தி குத்தால் நேற்று தாக்கப்பட்ட நிலையில், சிகிச்சையில் உள்ள மருத்துவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, '' மருத்துவர் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்து வந்தேன்.. அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு தைரியம் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்.. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் தாய் உள்ளத்தோடு சேவை செய்து வருகின்றனர்'' என்றார்.
மேலும், ''தனி நபருக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதனை வேறு வகையாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். கத்தி குத்து வரை சென்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. இது மருத்துவர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது. நேற்று உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு துணை முதல்வரை அனுப்பி பார்க்க வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட தாயின் மகன் இப்படி செய்தது சரி என்று சொல்லிக்கொள்வதெல்லாம் அது தாய்க்கும் மகனுக்கும் உட்பட்டதுதான்'' என கூறினார்.
இதையும் படிங்க: மருத்துவருக்கு கத்திக்குத்து: என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு - அமைச்சர் மா.சு தகவல்!
தொடர்ந்து பேசியவர், ''இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நிகழக்கூடாது. அதற்குத் தகுந்த பாதுகாப்பு அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முதலமைச்சர் தலையிட்டு இதனை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். நோயாளிகள், உறவினர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் தர வேண்டும்'' என்றார்.
மேலும், ''மருத்துவர்களை நம்பிதான் கோடிக்கணக்கான புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் இருக்கிறார்கள். நோயாளிக்கும், நோயாளிகளின் உறவினருக்கும், மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து தேவையான சட்டத்தை ஏற்றவும் சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்ற நிலை வரக்கூடாது. எல்லோருக்கும் சட்டம் என்பது சமமானது. தவறு செய்யும் பொழுது மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து கூட தமிழகத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகிறார்கள்'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்