சென்னை: மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று (நவ.14) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் பிறப்பு பிரிவு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி ஆண்டன் உரேஷ் குமார், "நேற்று காலையில் தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியின் உடல் நிலை முன்னேறி வருகிறது.
உயர் மட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்தில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. மருத்துவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை உறுதி செய்தால் தான் மருத்துவர்கள் பயம் இல்லாமல் பணியாற்ற முடியும்.
தேவையான அளவுக்கு சிசிடிவி கேமேரா பாதுகாப்பு பணியாளர்கள் தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
இதையும் படிங்க: "என் மகன் இதய நோயாளி; அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது" - மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரின் தாயார் உருக்கம்!
புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளோம். இதை போராட்டமாகவோ ஆர்ப்பாட்டமாகவோ பார்க்க வேண்டாம். ஒரு மருத்துவருக்கு நேரிட்ட ஆதங்கத்தை தெரிவிக்கும் விதமாக தான் இன்று போராட்டம் நடைபெற்றுள்ளது.
மருத்துவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம். தனிமனித ஒழுக்கமும், மாற்றமும் இருந்தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும். மருத்துவ சட்டத்தின் அடிப்படையில் வழக்குகள் பதிய வேண்டும். மருத்துவர்களுக்கு முறையான லைசன்ஸ் உள்ள துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்